டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்களைப் பற்றி அக்குபங்சர் பயின்றவர்கள் , பிராக்டிஸ் செய்பவர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அவர் பெயர் முழுமையாக பரிச்சயம் ஆகவில்லை.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் , தமிழக மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பெயர் தாங்கிய பலகைகள் , அவரது புகைப்படம் இல்லாத மாவட்டங்களே இல்லை எனலாம். அது போலவே , பஸ்லுர் ரஹ்மான் அவர்களின் பெயரும் புகழ் பெறவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அக்குபங்சர் மருத்துவத்திற்கு புது ரத்தம் பாய்ச்சி , யாருமே எதிர்பாராத கோணங்களில் அக்குபங்சரின் தத்துவங்களை எடுத்துரைத்து – ஒரே ஒரு அக்குப்பங்சர் புள்ளி மூலம் எந்த ஒரு நோயையும் குணமாக்க முடியும் என , பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் வாயிலாக நிரூபித்து உலகை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் அவர். டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்கள் ” இந்திய அக்குப்பங்சரின் தந்தை ” எனப் போற்றப்படுகிறார். அந்தப் போற்றுதலுக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர் அவர். தமிழ்நாடு பெற்றெடுத்த தவப்புதல்வர்களில் டாக்டரும் ஒருவர்.
டாக்டர் அவர்கள் அடிப்படையில் ஒரு ஆங்கில மருத்துவர். MBBS, MD போன்ற பட்டங்களை, Stanley Medical College / Madras Medical College ஆகிய கல்லூரிகளிலிருந்து பெற்றவர். எல்லா இளைஞர்களையும் போல , தானும் ஒரு சிறந்த மருத்துவராகி , மக்களுக்கு சேவை செய்யப் போகிறோம் என்கிற கனவுடன் – மருத்துவப் படிப்புக்குள் நுழைந்தார். ஆனால் , விதி வேறு மாதிரி இருந்தது. ஒவ்வொரு வருடங்களாக கடக்க கடக்க , அவர் ஏதோ ஒன்றை உணர ஆரம்பித்தார். ஒவ்வொரு ஆங்கில மருந்தும் சில பல பக்க விளைவுகளை கொண்டதே என்பதும் , எந்த மருந்தும் நோய்களை குணமாக்காமல் அவற்றை தற்காலிகமாக அடக்கி ( suppressing ) வைக்கின்றன என்பதுவுமே அவை. அவருக்குள் எண்ணற்ற வினாக்கள் , சந்தேகங்கள் எழத் துவங்கின.
எந்த ஒரு கருத்தையும் , ஆய்வு செய்து உண்மையைக் கண்டறியும் திறன் இயல்பாகவே அவருக்கு இருந்தது. இதை ஆங்கிலத்தில் Critical thinking என்றும் , தமிழில் ” நுண் மாண் நுழைபுலன் ” என்றும் கூறுவார்கள். ஊடுருவி சிந்திக்கும் திறன் தான் அது. உதாரணமாக , மாணவராக அவர் இருந்த போது , மருத்துவப் பேராசிரியர் ஒருவரிடம் ” ஸ்டெதஸ்கோப்பின் பயன் என்ன ? ” என கேட்டு , அதை தொடர்ந்து அவர்கள் நடத்திய விவாதத்தை தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த விவாதத்தை நீங்கள் படித்துப் பார்த்தால், டாக்டர் அவர்களின் துணிச்சலும் , புத்தி கூர்மையும் , நகைச்சுவை உணர்வும் உங்களுக்கு தெரிய வரும் . அவர் எழுதிய நூல்களில் , பல இடங்களில் நீங்கள் கவனித்தால் – அதிரடியாகவும் , ஹாஸ்யமாகவும் ( sense of humour ) தன் கருத்துக்களை வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம். எந்த ஒரு நோயையும் அக்குபங்சர் மூலம் குணமாக்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையையும் , துணிச்சலையும் அவரிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன்.
காலம் செல்ல செல்ல , தான் பயின்ற மருத்துவ முறையைப் பற்றி அவர் ஏமாற்றம் அடைந்தார். குறிப்பாக , நோய்க்காக வைத்தியம் பார்க்க வரும் மக்களை , தற்காலிகமாக ( temporary relief ) அனுப்பி வைத்து ஏமாற்றுகிறோமோ என்ற அற உணர்வு அவருக்குள் எழுந்து கொண்டே இருந்தது .
எப்போதுமே , அற உணர்வு இருக்கும் ஒருவரிடத்தில் நிச்சயம் இறை உணர்வும் இருக்கும். மனிதர்களுக்குள் இருக்கும் இறைவன் தான் , மனதில் அற உணர்வை தட்டி எழுப்புகிறான். மக்களுக்கு முழுவதும் பயனளிக்கக் கூடிய , ஒரு நல்ல வைத்திய முறையை காட்டுமாறு இறைவனிடம் , பஸ்லுர் ரஹ்மான் அவர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தார். அவருக்கு பக்க பலமாக இருந்தவர் அவரது சகோதரர் ( அண்ணன் ) டாக்டர். சித்திக் ஜமால் அவர்கள். அவரும் ஒரு ஆங்கில மருத்துவரே.

சொல்லப்போனால் , பஸ்லுர் ரஹ்மான் அவர்களுக்கு முதன் முதலில் அக்குபங்சர் மருத்துவம் என ஒன்று இருக்கிறது என்று அறிமுகப்படுத்தியவரே சித்திக் ஜமால் அவர்கள் தான். அக்குபங்சரைப் பற்றி அவருக்கு அறிமுகப்படுத்தி , பஸ்லுர் ரஹ்மான் அதைக் கற்றுக் கொள்ள தூண்டுதலாக அவரது சகோதரர் சித்திக் ஜமால் இருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் இணைபிரியாமலும் , உத்வேகமாகவும் செயல்பட்டனர். அவர்களை மக்கள் ” டாக்டர் சகோதரர்கள் ” என அழைக்கின்றனர். சித்திக் ஜமால் அவர்கள் , தனது சகோதரருக்கு ஒருவகையில் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.
நவீன மருத்துவ முறையின் ஒரு தெளிவற்ற போக்கால் , வெறுப்படைந்த டாக்டர். பஸ்லுர் ரஹ்மான் , பலவித மருத்துவ முறைகளை ஆராய்ந்து பார்த்தார். அனைத்துமே கடினமாகவும் , குழப்பங்கள் நிறைந்ததாகவும் காணப்பட்டன. எப்படியோ ஒரு வழியாக , தன்னிடம் வந்த ஒரு நோயாளி மூலம் ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றி கேள்விப்பட்ட டாக்டர் சகோதரர்கள் – அந்த வைத்திய முறையைப் பற்றி , பல்வேறு நூல்கள் வாயிலாக கற்று , அதை பிராக்டிஸ் செய்யத் தொடங்கினர். ஹோமியோபதி அவர்களுக்கு ஓரளவு ஆறுதலாகவும் , பிராக்டிஸ் செய்ய எளிதாகவும் இருந்தது. அதற்கு மேலாக , நோய்களுக்கு உடனடித் தீர்வாகவும் , குணமளிப்பதாகவும் இருந்தது. இருந்த போதிலும் , இறைவனின் சித்தம் அவர்களை இன்னும் விடவில்லை .
ஏனெனில் , ஹோமியோபதியிலும் சில சங்கடங்கள் அவருக்கு தெரிந்தன. உதாரணமாக , எந்த வீரியத்தில் ( potency ) மருந்தை தேர்ந்தெடுத்துக் கொடுப்பது , ஒரு நோய்க்கு பல மருந்துகள் இருக்கின்றன – அவற்றில் ஒன்றை எப்படி தேர்ந்தெடுப்பது போன்ற சிரமங்கள் இருந்தன. இதை விட , மேலான ஒரு மருத்துவ முறை ஒன்று உள்ளது என அவர்களின் உள்ளுணர்வு கூறியது.
கடைசியில் , இறைவனின் கிருபையால் டாக்டர் சகோதரர்கள் அக்குபங்சருக்கு வந்து சேர்ந்தனர். படிப்படியாக அதைக் கற்றுக் கொண்டு அக்குபங்சரையும் பிராக்டிஸ் செய்யத் தொடங்கினர். எந்த ஒரு நோயும் , எந்த ஒரு உறுப்பும் தான் குணமாவதற்குரிய ஆற்றலை , சுற்றுப்புற அலைகளிலிருந்து ( human body absorbs cosmic rays- that have different wave lengths and frequencies – from atmosphere via specific acupuncture point which are located on the surface of body ) தாங்களே – சில குறிப்பிட்ட அக்குபங்சர் புள்ளிகள் வாயிலாக ஈர்த்து நோயை குணமாக்கிக் கொள்கின்றன என்ற தத்துவம் அவர்களுக்கு மிகுந்த வியப்பளித்தது.
ஆரம்பக் கட்டங்களில் , தனக்கு தெரிந்தவரை அக்குபங்சர் புள்ளிகள் வாயிலாக மக்களுக்கு டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் சிகிச்சை அளித்து வந்தார். பணம் எதுவும் வாங்காமலேயே – இரண்டு வருடங்களில் , கிட்டத்தட்ட 6000 நோயாளிகளுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளித்ததாக டாக்டர் குறிப்பிட்டுள்ளார். அக்குபங்சர் தத்துவங்களில் நன்கு தேர்ச்சி பெற்றதாக உணர்ந்த பிறகே , தொழில் முறையிலான வைத்திய முறையை அவர் ஆரம்பித்தார். இதற்கிடையில் , ஆங்கில மருத்துவம் செய்வதை படிப்படியாக குறைத்து , ஒரு கட்டத்தில் அதை இழுத்து மூடி விட்டனர். ஆங்கில மருத்துவ முறையை கடுமையான வார்த்தைகளில் டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் சாடினார்.
1984 – க்கு பிறகு அக்குபங்சர் சிகிச்சை மூலம் அவர் குணமாக்கிய நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே சென்றது. 15 வருடங்களில் லட்சக்கணக்கான நோயாளிகள் குணமடைந்ததாக கூறுகிறார்கள். இதற்கிடையில் மருத்துவர்கள் கூடியிருக்கும் கருத்தரங்குகள் , விவாதங்களில் கலந்து கொண்டு – நோய்களை அணுகுவதிலும், குணமாக்குவதிலும் அக்குபங்சருக்கும் , ஆங்கில மருத்துவ முறைக்கும் உள்ள வித்தியாசங்களை தர்க்கரீதியாக எடுத்துக் கூறி, மருத்துவர்களை திணறடித்தார். நவீன மருத்துவ முறையின் மீதான அவரது குற்றச்சாட்டுகளுக்கும் , அக்குபங்சர் எவ்வாறு வேலை செய்கிறது என்கிற அவரது விளக்கங்களுக்கும் சரியான பதிலளிக்க முடியாமல் எதிரிலிருந்த மருத்துவர்கள் திணறினர். டாக்டர். பஸ்லுர் ரஹ்மான் அவர்கள் ” ஹெல்த் டைம் ” என்ற மாத இதழை துவங்கி , அதில் மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகளையும் , அக்குபங்சரைப் பற்றியும் தொடர்ந்து எழுதினார் . கிட்டத்தட்ட 15 நூல்கள் எழுதியுள்ளார். அவரது ஒவ்வொரு நூலும் ஒரு அறிவுக் களஞ்சியம்.

ஏற்கெனவே இருந்த ஒரு மருத்துவ முறையை , முற்றிலும் புதிய கோணத்தில் ( entirely new perspective ) நடைமுறைப்படுத்திய டாக்டர் அவர்கள் , தனது பணிகளுக்கு கடுமையான சவால்களை பொது மக்களிடமிருந்தும் , பிற மருத்துவ முறையை சேர்ந்தவர்களிடம் இருந்து , நிச்சயம் சந்தித்து இருப்பார் என்பதை நாமே யூகிக்கலாம் அல்லவா ? எனினும் , அவர் உருவாக்கிய ஒற்றைப் புள்ளி அக்குபங்சர் சிகிச்சை மக்களிடையேயும் , சிகிச்சையாளர்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றது. பலரும் சிகிச்சை பெற துவங்கினர் , அக்குபங்சர் கற்றுக் கொள்ள துவங்கினர்.
டாக்டர். உ வே பிங் ( Wu Wei Ping ) என்ற சீன மருத்துவர் எழுதிய Chinese Acupuncture என்ற நூலில் , ” ஒரே ஒரு அக்குபங்சர் புள்ளி , ஆயிரக்கணக்கான நோய்களை குணமாக்கக் கூடியது ” என்ற வரிகளை படித்த டாக்டர் அவர்கள் , அவ்வாறு ஒரு புள்ளி இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளதென உணர்ந்து தனது தேடலை தொடங்கினார். எந்த ஒரு ஞானத்தையும் இறைவனால் மட்டுமே வழங்க முடியும் என்பது டாக்டர் அவர்களின் உறுதியான முடிவு. அதன்படி , கடுமையான ஆராய்ச்சிக்கு பிறகு ” Sp – 5 ” ( மண்ணீரல் சக்தி நாளத்தில் உள்ள காற்று மூலக புள்ளி ) என்கிற புள்ளியே எல்லா நோய்களையும் குணமாக்கும் சாத்தியம் கொண்டது என்ற மகா மந்திரத்தை வெளிப்படையாக அறிவித்தார். எப்படி அந்தப் புள்ளி , அனைத்து நோய்களையும் குணமாக்க வாய்ப்புள்ளது என்ற விளக்கங்களை ” புதிய அக்குபங்சர் ” என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். அதை புரிந்து கொள்ள , இறைவனின் அனுக்கிரமும் , ஒரு ஆயுளும் வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் எண்ணற்ற அக்குபங்சர் கல்வி மையங்களும் , அக்கு ஹீலர்களும் / அக்கு தெரபிஸ்டுகளும் இருக்கிறார்கள் அல்லவா ? அந்தப் புரட்சி உருவாக காரணமான நெருப்புப் பொறி டாக்டர். பஸ்லுர் ரஹ்மான் அவர்கள் தான். அக்குபங்சர் பற்றிய விழிப்புணர்வு – அதாவது மருந்தில்லாமல் இயற்கையாக குணமாகும் மருத்துவம் – மக்களிடையே அதிகமாக அதிகமாக , ஏனைய மாற்று மருத்துவ முறைகளும் மலர்ச்சியும், எழுச்சியும் பெற தொடங்கின. இவ்வாறு , தமிழக மக்களின் வாழ்விலும் , உடல்நலத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் பஸ்லுர் ரஹ்மான் என்கிற தனிமனிதர் ஒருவர் .
முதன் முதலில் அக்குபங்சர் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் , டாக்டர் எழுதிய ” நீங்களும் அக்குபங்சர் மருத்துவர் ஆகுங்கள் ” என்ற நூலைப் படிக்க வேண்டும். நிச்சயம் முதல் வாசிப்பில் எதுவும் புரியாது. பலமுறை படிக்க வேண்டும். சற்று பொறுமையாக இருக்க வேண்டும். பிறகு , தானாக புரிய ஆரம்பிக்கும். அடுத்த நூல், அவர் எழுதிய ” புதிய அக்குபங்சர் ” . நான் என்ன நினைக்கிறேன் என்றால் , இந்த நூல் வருங்காலத்தில் உருவாகப் போகும் அக்குபங்சர் மருத்துவர்களுக்கு ஒரு கையேடு போலவும் , வழிகாட்டு நூலாகவும் அமைய வேண்டும் – என்ற அழுத்தமான எண்ணத்திலும் , பிரார்தனையோடும் அவர் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அவ்வளவு ஆழமான நூல் அது.
உதாரணமாக , புதிய அக்குபங்சர் நூலில் ” Li – 2 ” என்ற புள்ளியை ” பெரும்பாலான நோய்களை குணமாக்கும் அபூர்வ புள்ளி என்றே பஸ்லுர் ரஹ்மான் அவர்கள் குறிப்பிடுகிறார். Lr -4 என்ற புள்ளிக்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கங்கள் , மனித சிந்தனையையே புரட்டி போடக் கூடியவை. அதாவது , தறிகெட்டு ஓடும் காற்று மூலகம் , கட்டுப்பாட்டு சுற்றில் மரம் மூலகத்தை பாதிக்கிறது ( புயல் காற்று மரங்களை சாய்ப்பது போல் ) . மேலும் , காற்றே – உயிர்க்காற்றாக மாறி , செத்துப் போகும் நிலையிலுள்ள மரங்களுக்கு / தாவரங்களுக்கு உயிரளிக்கிறது. இவை போன்ற திகைக்க வைக்கும் விளக்கங்களை அளிக்கிறார். டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்களின் சிந்தனை முறையே முற்றிலும் மாறுபட்டதாகவும் , தனித்துவம் ( Original thinking ) மிக்கதாகவும் இருக்கிறது.

டாக்டர் அவர்களின் எந்த ஒரு விளக்கத்திலும் இறை சிந்தனை கலந்தே இருக்கிறது. அவரது இறைவழி வாழ்க்கை / இறை பிரார்த்தனை போன்ற தத்துவங்களை முதலில் புரிந்து கொண்டால் – அவரது அக்குபங்சர் விளக்கங்களை ஓரளவு எளிதில் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் , ஒவ்வொரு நோக்கத்திலும் , ஒவ்வொரு எண்ணத்திலும் – இறைவனின் ஆற்றல் கலந்தே இருக்கிறது என்பதே அவரது உறுதியான முடிவு.
மேலும் , CV -13 , Lu -5 , KI- 7, KI- 8, KI -2, SP- 1, SP – 9, Liv- 3, ஆகிய அக்குபங்சர் புள்ளிகளுக்கு , அந்தந்த புள்ளிகளுக்கு தனித்துவமான விளக்கங்களை டாக்டர் அளித்துள்ளார்.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
- திருக்குறள்
தான் பெற்ற ஞானங்களை , எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் – நம்மிடமே விட்டுச் சென்ற , டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் என்கிற மேதைக்கு , மக்களாகிய நாம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம் .
Acupuncture Therapist , Mob: 9597665196