
மனதில் போராட்டங்கள் (mental conflicts) இல்லாத மனிதரே இல்லை எனலாம். ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா , சரியா தவறா , முடிவு எடுக்கலாமா வேண்டாமா என குழப்பங்கள் நமக்குள் எப்போதும் உண்டு. மனப் போராட்டங்கள் மனதில் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. அதன் விளைவாக , பலவிதமான நோய்கள் (psychosomatic diseases) உடலில் ஏற்படலாம்.
மனப் போராட்டங்கள் ஏன் மனதில் உருவாகின்றன எனப் பார்ப்போம். சிக்மண்ட் பிராய்டு என்கிற மனோதத்துவ அறிஞர் மனித மனதை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார். அவை : –
1. Super Ego ( மனசாட்சி )
2. Ego ( பகுத்தறியும் அறிவு )
3. Id ( உயிரியல் தேவைகள் அல்லது அடிப்படை உணர்வுகள் )
மனம் எப்போதும் இந்த மூன்று கோணங்களில் செயல்படுகிறது. ஆனால் விலங்குகளுக்கு இவ்வாறு மன அமைப்பு இல்லை. அதனால் அவற்றிற்கு மன அழுத்தமும் இல்லை.
Id என்பது ” பசி , தாகம் , தூக்கம் , பாலுறவு ” போன்ற , உயிர் வாழ்வதற்கான மிக மிக அடிப்படைத் தேவைகள் ஆகும் . Super ego என்பது நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்து , அது சரியா தவறா எனக் தீர்ப்பு கூறிக் கொண்டே இருக்கும். Super ego என்பது எதற்கும் வளைந்து கொடுக்காத சர்வாதிகாரி போன்றது. அறநெறி தான் அதன் அடிப்படை.
Ego என்பது நாம் பொதுவாக குறிப்பிடும் அகந்தை , அகங்காரம் , திமிர் போன்ற பொருள்களில் இங்கு வருவதில்லை. மாறாக , வெளியே உள்ள சமுதாயத்திற்கும் , மனதின் அடிப்படைத் தேவைகளான Id-க்கும் இடையில் ஒரு பாலம் போல (mediator) செயல்படுகிறது .
Ego என்பது தான் ஒரு மனிதனை , சமூகத்தில் மனிதனாக வாழ வைக்கிறது. மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு. அவன் ஒருவரை ஒருவர் சார்ந்தும் , கூட்டாகவும் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஆதலால் , ஒரு மனிதன் தன் இஷ்டம் போல் வாழ முடியாது.
ஆனால் , மறுபுறமோ – பசி , தாகம் , தூக்கம் , பாலுணர்வு போன்ற அடிப்படைத் தேவைகள் தங்களை நிறைவேற்றுமாறு மனிதனை உந்தித் தள்ளுகின்றன. மனிதர்கள் , கண்ணியத்துடனும் நாகரீகமாகவும் இந்த சமுதாயத்தில் வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். எனவே , பசி / பாலுறவு போன்ற எந்த உயிரியல் தேவையாக இருந்தாலும் – அவற்றை இடம் , பொருள் , ஏவல் பார்த்தே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
அவ்வாறு நிறைவேற்றிக் கொள்ளும் வரை – பொறுத்திருக்குமாறு , Ego (Conscious mind) அவரை நிறுத்தி வைக்கிறது. அதே நேரம் , id உணர்வுகளுக்கு நல்லது கேட்டது தெரியாது. எனவே , அவை தங்களை நிறைவேற்றுமாறு மெல்லிய குரலில் மனிதனிடம் கூறிக் கொண்டே இருக்கின்றன. இன்னொரு புறம் , மனசாட்சி நம் ஒவ்வொரு எண்ணத்தையும் , செயலையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது .
மனிதனின் அடிப்படை உணர்வுகளான , ” பசி , தாகம் , தூக்கம் , பாலுறவு ” போன்றவை நிறைவேற எவ்வளவு தாமதம் ஆகிறதோ – அதாவது எவ்வளவுக்கு எவ்வளவு அதை நிறுத்தி வைக்கிறோமோ – அந்த அளவிற்கு மனதில் அழுத்தமும் , போராட்டமும் ( internal tension is built gradually) உண்டாகும். காலப்போக்கில் , மனம் சோர்ந்து விரக்தி ( depression ) ஏற்படும்.

இதை , Ego- க்கும் , Id- க்கும் நடக்கும் போராட்டம் என்று கூட சொல்லலாம். போதாக்குறைக்கு , மனசாட்சி என்கிற Super ego- வும் சேர்ந்து கொள்கிறது .
உதாரணங்கள் :
- நல்ல பசி ஏற்படுகிறது. ஆனால் , பணம் சம்பாதிப்பதற்காக நம் சாப்பிடுவதை கூட தள்ளிப் போட்டு விட்டு ஓடுகிறோம்.
- குறிப்பிட்ட வயதிற்கு மேல் , பாலுணர்வு ஏற்படுகிறது. ஆனால் , போதுமான வருமானம் இல்லை , வயது குறைவு போன்ற பல காரணங்களை சொல்லி சொல்லி – இயற்கையான பாலுணர்வை நிறுத்தி வைக்கிறோம்.
- ஒரு பெண்ணை நீங்கள் ரசிக்கிறீர்கள் . ஒரு கவிதை எழுதுகிறீர்கள். அதை அவளிடம் நீங்கள் வாய் விட்டு அதை சொல்ல முடியாது.
மனிதர்கள் எப்போதும் , சமூகத்தோடு சக மனிதர்களுடன் இணக்கமாக வாழ வேண்டி இருப்பதால் – மனப் போராட்டங்கள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் . குறைவான மனப் போராட்டங்களுடன் வாழ்வது மட்டுமே இப்போதைக்கு சாத்தியம்.